(யட்சன் கேள்விகளும் தருமர் பதில்களும்) "வாழ்வில் நலம்பெற ஆன்றோர் அருளுரகள்" என்ற புத்தகத்திலிருந்து,படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நோயாளனுக்கு யார் தோழன்?
மருத்துவன்.
மரணமடைகின்றவனுக்கு யார் தோழன்?
தானம்.
இன்சொல் சொல்கின்றவன் எதை அடைகின்றான்?
எல்லோருக்கும் அன்பனாகின்றான்.
ஆராய்ந்து காரியத்தைச் செய்பவன் எதை அடைகின்றான்?
வெற்றியை.
அநேகர்களை நண்பர்களாகச் செய்து கொள்பவன் எதை அடைகிறான்?
சுகத்தை.
எது ஆச்சரியம்?
தினந்தோறும் இறப்பவர்களைக் கண்டும் அது நமக்கு இல்லை என்று எண்ணியிருக்கின்றார்களே அதுதான் ஆச்சரியம்.
எது வழி?
ஆன்றோர்கள் செல்லும் வழிதான் வழி.
எது தினமும் நடக்கின்ற நிகழ்ச்சி?
பூமியானது சமையல் செய்யும் பாண்டம்;
ஆகாயம் அதற்க்கு மூடி;
காலமானது சராசரங்களையெல்லாம் அதில் இட்டு,
இரவு பகலாகிய விறகை வைத்து,
சூரியனாகிய நெருப்பை மூட்டி,
மாதம் ருதுக்களாகின்ற கரண்டிகளால்
கிளரிப் பக்குவம் செய்கின்றதென்பதுதான்
தினமும் நடந்து வருகின்ற நிகழ்ச்சி.
பூமியைக் காட்டிலும் கனமானது எது?
தாய்.
ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?
தந்தை.
காற்றைவிட வேகமுள்ளது எது?
மனம்.
புல்லைக்காட்டிட்லும் அதிகமானது எது?
கவலை.
எது தூங்கும்போது கண்களை மூடாமல் இருக்கிறது?
மீன்.
எது பிறந்தும் அசைவதில்லை?
முட்டை.
வீட்டீலிருப்பவனுக்கு யார் தோழன்?
மனைவி.
எது அமிர்தம்?
பால்.
எவன் ஒருவனாகச் சஞ்சரிக்கிறான்?
சூரியன்.
பிறந்தவன் எவன் மறுமடியும் பிறக்கிறான்?
சந்திரன்.
தெய்வத்தால் ஏற்படுத்தப்பட்ட துணை யார்?
மனைவி.
பொருள்களுள் எது உத்தமமானது?
கலையறிவு.
எதனால் உலகம் மூடப்பட்டிருக்கிறது?
அஞ்ஞானத்தால்.
எது ஞானம்?
உண்மைப் பொருளை நன்கு அறிதலே ஞானம்.

No comments:
Post a Comment